பாலக்கோடு, ஜூலை 21 | ஆடி 05 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கணவனஅள்ளி காப்புக்காடு பகுதியில், வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி சமூக பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. இந்த இயக்கம் மாவட்ட வன அலுவலர் திரு. இராஜங்கம் தலைமையில் நடைபெற்றது. பாலக்கோடு வனச்சரகத்திற்குட்பட்ட நெடுஞ்சாலை ஒட்டிய வனப்பகுதியில், வனவிலங்குகளுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் மாசுபாடு மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பெருமளவாக பிளாஸ்டிக் பைகள், மதுபாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் தேக்கமாகி இருந்தன.
இதனை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றும் பணியில் பாலக்கோடு வனச்சரக அலுவலர் திரு. கார்த்திகேயன், வனப்பணியாளர்கள் மற்றும் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து செயல்பட்டனர். இந்த சமூக சேவையில் பி.செட்டிஅள்ளி பஞ்சாயத்து தூய்மை பணியாளர், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர். சுமார் 480 கிலோ பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சிக்காக பி.செட்டிஅள்ளி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பசுமை அமைப்புகளின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.