தர்மபுரி, ஜூலை 2 (ஆனி 18):
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், மணியம்பாடி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 7-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.07.2025) துவங்கி வைத்தார். மாவட்டத்தில் மொத்தம் 3,45,500 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன. இதில் நான்கு மாதம் மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசால் 3,62,950 கோமாரி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்தடுப்பூசி முகாம் ஜூலை 2 முதல் ஜூலை 22 வரை சிறப்பு முகாம்களாக அனைத்து கிராமங்களிலும் நடைபெறும். விடுபட்ட கால்நடைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி ஜூலை 23 முதல் 31 வரை மேற்கொள்ளப்படும். கால்நடை வளர்ப்போர் 100% தடுப்பூசி செலுத்தச் செய்வதற்கும், அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கிளைநிலையம் மற்றும் மருத்துவமனையை அணுகலாம். கூடுதல் தகவலுக்கு தொலைபேசி எண் 1077 மற்றும் 9445001113, 9443272060, 9443409346, 8144874747 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.