பாலக்கோடு, ஜூலை 20 | ஆடி 04 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் சென்று விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் பகுதி மற்றும் மருந்தகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பதிவு விவரங்கள், பணியாளர்களின் செயல் நடைமுறை, மருந்துகளின் கிடைப்புத் தன்மை ஆகியவற்றை குறித்து நேரில் கேட்டறிந்தார்.
மேலும், நோயாளிகளுடன் வந்த உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருக்கும் இடங்களையும் பார்வையிட்டு, அவர்களுக்கான அமர்விடம், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை வழங்கினார். மருத்துவமனை வளாகத்தின் தூய்மை, கழிவறைகள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இருக்க மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பின்னர், பாலக்கோடு ஒன்றியம், புலிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் நோயாளிகள் பதிவு விவரங்கள், மருந்துகள் இருப்பு உள்ளிட்ட பதிவேடுகளை சரிபார்த்து, மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை நேரில் பார்த்து கேட்டறிந்தார்.
இவ்வாய்வின்போது, பாலக்கோடு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மரு. சசிரேகா, செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வு நோயாளிகள் நலனில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகப் பலர் பாராட்டினர்.