பாப்பாரப்பட்டி, ஜூலை – 4 (ஆனி 20):
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் நடைபெற்ற வீரவணக்கப் பேரணியின் ஒரு பகுதியாக, பாப்பாரப்பட்டியில் உரிமைக்காக உயிர்நீத்த 59 உழவர் போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பேரணி, பாப்பாரப்பட்டி மின்நிலையத்தில் இருந்து தொடங்கி மூன்றோடு வழியாக புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில், மாவட்ட அவைத்தலைவர் பழனியப்பன், செயலாளர் முருகன், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். மேற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் யோகானந்த மணி முன்னிலை வகித்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக கலந்து கொண்டனர். புதிய பஸ்நிலையம் அருகே வீரமரணம் அடைந்த உழவர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் சுரேஷ், உதயகுமார், ராஜ்குமார், ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.