தருமபுரி, ஜூலை 22 | ஆடி 06 -
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்ட ரூ.6,750 சிறப்பு ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் 2.57 காரணியின் அடிப்படையில் ஓய்வூதியத்தையும் ஊதியத்தையும் திருத்தம் செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலை 10.30 மணிக்கு கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சுப்பிரமணி தலைமையிலான ஓய்வூதியர் குழுவினர் கலந்து கொண்டு, தங்கள் நீண்டகால கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். முன்னிலை நிர்வாகிகளாக பெருமாள், கோவிந்தன், வளர்மதி, வெண்மதி, முருகன் ஆகியோர் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில், ஆகஸ்ட் 18 முதல் 26 வரை மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெறும் என்றும், அதில் அனைத்து ஒன்றியங்களிலும் ஓய்வூதியர்கள் முழுமையாக பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும் என போராட்டத்தில் உறுதிபூண்டனர்.