தருமபுரி, ஜூலை 15 (ஆனி 31) -
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பதுடன் சேர்த்து, பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 48 மணி நேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
அரசுத் திட்டங்கள், உரிமை ஆவணப் பணிகள், வருவாய் பதிவுகள், வரம்பு சீரமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செயற்படுத்தி வரும் நில அளவை அலுவலர்கள், தங்களுக்கு மூலதன வசதிகள் மற்றும் மனிதவள ஆதரவு இல்லாமல், அதிக பணிச்சுமையில் சிக்கி வருகின்றனர் எனக் கூறி, தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன:
-
களப் பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.
-
தரம் குறைக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும்.
-
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
-
துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.
-
ஒப்பந்த அடிப்படையில் நில அளவையர் நியமன முறையை ரத்து செய்ய வேண்டும்.
-
புற ஆதார ஒப்பந்த முறையில் புல உதவியாளர் நியமனத்தை கைவிட வேண்டும்.
-
உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
-
நீதிமன்ற நடைமுறை பயிற்சிகளை வழங்க வேண்டும்.
-
புதிய நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்கள் அமைக்க வேண்டும்.
-
ஒப்படைக்கப்பட்ட சார் ஆய்வாளர் பணியிடங்களை மீள வழங்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். சுருளிநாதன், மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை, வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சி. துரைவேல், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் அகிலன் அமிர்தராஜ் ஆகியோரும் திரளான அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்து கொண்டனர்.