பாப்பாரப்பட்டி, ஜூலை 21 | ஆடி 05 -
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பாப்பாரப்பட்டி காவல் வரம்பிற்குட்பட்ட மண்ணேரி – சஞ்சீவிபுரம் பகுதியில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 220 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
பாப்பாரப்பட்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் மாறி தலைமையிலான போலீசார் சஞ்சீவிபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, அப்பகுதியைச் சேர்ந்த அருள் மற்றும் சேகர் ஆகியோரது வீடு மற்றும் அவர்களுக்குச் சொந்தமான டாட்டா ஏசி வாகனம் ஆகியவற்றில் சுமார் 13 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனைப்பொறுத்து, பாப்பாரப்பட்டி காவல்துறையினர் 220 கிலோ குட்கா பொருட்களையும், அவை பதுக்கி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். போலீசார் வருகையை முன்னறிந்து அருள் மற்றும் சேகர் ஆகிய இருவரும் தப்பி ஓடிய நிலையில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.