அரூர், ஜூலை 15 (ஆனி 31) -
தருமபுரி மாவட்டம் அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையில், துணை ஆய்வாளர் புஷ்பாகரன் மற்றும் காவல்துறையினருடன் கோட்டப்பட்டி வன காவலர்கள் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லையான தேக்கனாம்பட்டி ஓடை அருகே மதுவிலக்கு மீறல்களைக் கண்டறியும் நடவடிக்கையின்போது, ஒருவரின் சந்தேகத்திற்கிடமான நடத்தை குறித்து விசாரணை மேற்கொண்டனர். பெயர், விலாசம் கேட்டறிந்தபோது அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை தாலுகா, கீழக்காடு பஞ்சாயத்து, கண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் (த/பெ: அண்ணாமலை) என தெரியவந்தது.
அவரது வசமிருந்த ட்ரம்மில் சுமார் 100 லிட்டர் அளவு கள்ளச்சாரம் ஊறல் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு, அரூர் மதுவிலக்கு அமல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியதோடு, மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.