தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது 835 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் பெரும்பாலும் வெள்ளிச்சந்தை – பெரிய தப்பை வழியாக பயணிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு பயனளித்து வந்த 4-ஆம் எண் நகர பேருந்து, கடந்த ஒரு வருடமாக இந்த நகர பஸ் நேரம் தவறாமல் இயக்கப்பட்டு வந்த நிலையில், சில மாதங்களாக மாலை நேரத்தில் பேருந்து வராமல் இருப்பது மாணவர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது.
மாலை 5 மணிக்குப் பிறகு பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்வதற்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த நகர பஸ் வராததால் இரு மணி நேரத்துக்கும் மேலாக மாணவர்கள் தெருக்களில் காத்திருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள், மாணவிகளின் பாதுகாப்பு சிக்கலில் இருந்து வருகிறது என்று பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். பேருந்து சேவையின்மையால், மாணவர்கள் தற்போது தனியார் பேருந்துகளில் கடும் நெரிசலுடன் பயணிக்கின்றனர். இந்த நிலையில், மாணவிகள் சிலர் படிக்கட்டுகளில் ஏறும்போது தவறி கீழே விழும் போன்ற சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாலை 5 மணிக்கு மீண்டும் தடம் எண். 4. நகர பேருந்து இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இது தொடர்பாகப் பலமுறை புகார்கள் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இந்த கோரிக்கையை நிராகரிக்கும் சூழ்நிலையில், சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கூட்டமைப்புகள் இணைந்து சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.