Type Here to Get Search Results !

தொப்பூர் கணவாய் உயர்மட்ட பாலப் பணி: விபத்துகளைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவுகள்.


தருமபுரி, ஜூன் 10:

தருமபுரி மாவட்டம், தொப்பூர் மலைக்கணவாய் பகுதியில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (09.06.2025) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ.சதீஸ் தெரிவித்ததாவது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொப்பூர் மலைக்கணவாய்ப் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விபத்துகளையும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


முக்கிய அறிவுறுத்தல்கள்:

  • பாலம் கட்டும் பணி நடைபெறுவதை வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், 50 மீட்டர் இடைவெளியில் ஒளிரும் விளக்குகள் (Blinkers), பிரதிபலிப்பான்களுடன் கூடிய தடுப்புகள் (Barry Guard with reflecting Stickers), வேகத்தடைகள் (Rumpled strips) போன்றவற்றை அமைக்க வேண்டும்.
  • "கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன" என்பதை அறிவிக்கும் வகையிலான எச்சரிக்கைப் பதாகைகளை (Cautionary Boards) தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஒரு வார காலத்திற்குள் திலிப் பில்ட்கான் நிறுவனம் அமைத்திட வேண்டும்.
  • தொப்பூர் கணவாய் பகுதி முதல் இரட்டைப் பாலம் வரை, சாலையின் மையத்தில் உள்ள தடுப்புகளின் (Centre Median) அளவைக் குறைத்து, சாலையை அகலப்படுத்த வேண்டும். இதன் மூலம் வாகனங்கள் இரண்டு வழித்தடங்களில் பாதுகாப்பாகச் செல்ல வழிவகை செய்ய வேண்டும். மேலும், சாலையோரங்களில் சிமெண்ட் தடுப்புகள் மற்றும் கிராஷ் பேரியர்களை (Crash Barrier) அமைக்க வேண்டும்.
  • அடிக்கடி விபத்துகள் நிகழும் பகுதியான தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலம் அருகே வாகனங்கள் தேங்கி நிற்காமல், தொடர்ந்து பாதுகாப்பாக கடந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும்.


இந்த பாதுகாப்புப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை (NHAI), திலிப் பில்ட்கான் நிறுவனம் மற்றும் பாளையம்புதூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ.சதீஸ் கடுமையாக அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி, துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிவராமன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு. சி.க.ஜெயதேவ்ராஜ், மற்றும் திலிப் பில்ட்கான், தேசிய நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies