மாரண்டஅள்ளி, ஜூன் 9:
விழா நிகழ்வுகள் மங்கள வாத்தியங்களுடன் அதிகாலை கங்கை பூஜை, கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், கங்கணதாரணம், புண்ணியஹவாசனம், தேவசாந்தி, வேத பாராயணம், மகாதீப ஆராதனை, வாஸ்து சாந்தி, பிம்ப சுத்தி போன்ற புனித ஆன்மீக கிரியைகளுடன் தொடங்கியது. மாலை பால்குடம் எடுத்தல், அஷ்டபந்தனம் சாத்துதல் ஆகியன நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் துவாதசி திதி, சுவாதி நட்சத்திரம், கடக லக்னத்தில் சிறப்பாக நடைபெற்றது. கோபுரக் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அந்த நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜை, மகா மங்கள ஆரத்தி, சர்வ தரிசனம், தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவினை காண நடுகுட்லானஅள்ளி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் மிகுந்த பக்தியோடு கலந்து கொண்ட இந்த விழா கிராமத்துக்கு ஆன்மிக பரவசத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.