தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரயில்வே நிலையம் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆணின் பிரேதம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. உடனடியாக தகவலறிந்த சேலம் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இவரது அடையாளம் தெரியாததுடன், உறவினர்கள் யாரும் தொடர்பு கொள்ளாத நிலையிலும், மை தருமபுரி அமரர் சேவை குழுவினர் அவரது இறுதி சடங்குகளை மிகுந்த மரியாதையுடன் மேற்கொண்டனர். இன்று, சேலம் ரயில்வே காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சபரிநாதன், மை தருமபுரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அருணாசலம் மற்றும் கிருஷ்ணன், நிறுவனர் சதீஸ் குமார் ராஜா ஆகியோர் இணைந்து இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
இதுவரை மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர், 143 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்துள்ளனர். சமூகத்தில் உறவின்றி, ஆதரவின்றி வாழும் மற்றும் இறக்கும் நபர்களுக்கு உறவினராய் இருந்து இறுதி கடமையை செய்யும் இந்த அமைப்பின் சேவை மக்களிடம் பாராட்டை பெற்றுவருகிறது.