தருமபுரி, ஜூன் 09-
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்தில் உள்ள செட்டிகரை கிராமத்தில் சுமார் 160 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள், திடீரென வஃக்பு வாரிய சொத்துகளாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் சுமார் 103 ஏக்கர் நிலத்தை மட்டும் 6 தலைமுறைகளாக கிராம மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். விவசாயம் செய்து, வாங்கி, விற்று வந்த நிலங்கள் தற்போது தங்களுக்கே சொந்தமல்ல என திடீரென அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தருமபுரி எண்-2 இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய முற்பட்டபோது, “இது வஃக்பு வாரிய சொத்து” என தெரிவித்து பதிவு தடை செய்யப்பட்டது. இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் நேரில் தொடர்புகொண்டபோது, அவர்களும் “தெரியவில்லை” என பதிலளித்ததாக கூறப்படுகிறது.
பல தலைமுறைகளாக நிலங்களை வைத்திருக்கின்ற மக்கள், இந்த நிலங்கள் யூடியர் பதிவேடு, ஏ-ரிஜிஸ்டர் ஆவணங்களில் அவர்கள் பெயரில் இருக்கின்றன என்றும், உரிய பட்டா, பாக்கு பில்லுகள் மற்றும் வரி ரசீதுகள் மூலம் சொத்து உரிமையை நிரூபிக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில் திடீரென பத்திர பதிவு தடை செய்யப்பட்டிருப்பது அவர்களிடம் பெரும் குழப்பம் மற்றும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, செட்டிகரை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அவர்கள் இந்த நிலங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையானது என்பதால், அரசு உடனடியாக தலையிட்டு நில உரிமையை தெளிவுபடுத்தி, பத்திர பதிவு தடையை நீக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் வஃக்பு வாரிய சொத்து என அறிவிக்கப்பட்டதால், அந்தந்த நிலங்களை வைத்திருக்கும் மக்கள் சட்டதெரிந்து குழப்பத்தில் இருக்கின்றனர். மக்கள் கருத்துப்படி, இந்த நிலங்களின் மொத்த மதிப்பு சுமார் ₹300 கோடிக்கும் மேற்பட்டதாகும். இது போன்ற நில உரிமை குழப்பங்கள் எதிர்காலத்தில் பெரும் சட்டவிரோத நிலமாற்றங்களாக மாறக்கூடும் என்பதால், உரிய விசாரணை நடத்தி, நில உரிமையை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
.gif)

