பாலக்கோடு, ஜூன் 6:
திருச்சூரைச் சேர்ந்த சின்டாம்சாக்கோ (41) தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்", "குட் பேட் அக்லி" போன்ற படங்களில் நடித்திருந்தார். போதை பழக்கத்திலிருந்து மீள பெங்களூரிலுள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுவதற்காக குடும்பத்துடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். காரில் அவர், அவரது தந்தை சிபிசாக்கோ, தாய் மரியம்கார்லஸ் (60), சகோதரர் ஜோகோ சாக் (36), மற்றும் டிரைவர் அனிஸ் (42) ஆகியோர் இருந்தனர்.
பாறையூரை நெருங்கியபோது, எதிர்பாராத விதமாக காரின் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியை மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் நடிகரின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற பயணிகள் பலத்த காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சின்டாம்சாக்கோவின் தாயாரும் சகோதரரும் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிபிசாக்கோவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சோகமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.gif)

