கிட்டம்பட்டி கிராமத்தில் பொது வழிப் பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததால் பொதுமக்கள் அவதி – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 மே, 2025

கிட்டம்பட்டி கிராமத்தில் பொது வழிப் பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததால் பொதுமக்கள் அவதி – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


தருமபுரி, மே 3:

தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தில், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, திரௌபதி அம்மன் கோவில், அரசுப் பள்ளி, மயானம், மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல ஒரே பொது வழிப் பாதையை பயன்படுத்தி வந்துள்ளனர்.


இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த வழிப்பாதைக்கு அருகே உள்ள விவசாய நிலத்தை போத்தராஜ் என்பவர் வாங்கி வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அவர் பொது வழியை ஆக்கிரமித்து, சாலை நடுவே குழி தோண்டி, மக்கள் செல்ல முடியாதபடி தடை செய்துள்ளார். இதனை எதிர்த்து பொதுமக்கள் பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) மனோகரனிடம் புகார் அளித்தனர்.


தொடர்ந்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற டி.எஸ்.பி, பொதுமக்கள் செல்லும் வழியை தடை செய்யக் கூடாது என எச்சரிக்கை வழங்கினார். ஆனால், 2 மாத அமைதிக்குப் பிறகு, மீண்டும் போத்தராஜ் அந்த வழியை ஆக்கிரமித்து, வாழை மற்றும் தென்னை மரங்களை நட்டு பொதுவழியை மறித்து விட்டார். இதனால், பொதுமக்கள் கோயிலுக்கும், மயானத்திற்கும், விவசாய நிலங்களுக்கும் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, விவசாயத்தில் விளைந்த நெல், கரும்பு, தக்காளி, காய்கறிகள் மற்றும் பூச்செடிகளை வெளியே எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும், விரைவில் நடைபெறவுள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழா, மகாபாரத சொற்பொழிவு மற்றும் நாடக நிகழ்ச்சிகளுக்காக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோயிலுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனைக் கண்டித்து, பொது வழிப் பாதையை ஆக்கிரமித்து மக்களுக்கு துன்பம் தரும் செயலை அரசு உடனடியாக தடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிட்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் தமிழக அரசிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad