அதேபோல, இந்நகரின் நடுநாயகமாக அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ உமா மகேஸ்வரி உடனுறை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயம், பொம்மிடி சுற்றுவட்டார பகுதியில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அருள்பாலிக்கும் தலமாக விளங்கி வருகிறது.
இந்த ஆலயத்திற்கு என்று நீண்ட வரலாறு உள்ளது. 1969- களில் இவ்வூரின் முக்கிய பிரமுகர்களான காலஞ்சென்ற பச்சியப்பகவுண்டர், மாரியப்ப கவுண்டர் பெருமாள் கவுண்டர் ராமகிருஷ்ண கவுண்டர் மற்றும் எம்.பி.அன்பின் ஆறுமுகம் ஆகியோர்களால், ஸ்ரீ பொன்முத்து மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பொன் விநாயகர் ஆலயம் ஆகியவை சிறிய அளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அதற்கான இடத்தையும், பொருள் உதவியும் அக்காலகட்டத்தில் இவ்வூர் மக்கள் ஒற்றுமையுடன் வழங்கி இருக்கிறார்கள். அதன் காரணமாக, சிறிதாக இருந்த இக்கோயில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்று ஆலய விரிவாக்கம், வணிக வளாகம் என்று பொம்மிடி நகரின் அடையாளமாக மாறி இருக்கிறது.
மேலும், 30-03-2020 ம் ஆண்டு., பக்தர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் நன்கொடையுடன் அருள்மிகு ஸ்ரீ உமா மகேஸ்வரி உடனுறை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்திருக்கிறது. அதன்பிறகு கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து, தினமும் சிவனடியார்கள் மூலம் பூஜைகள், நடைபெற்று வருகிறது. அத்துடன் பிரதோஷ வழிபாடு, அமாவாசை, பௌர்ணமி பூஜைகள், நவகிரக தோஷ பரிகார வழிபாடும் நடத்தப்படுகிறது.
பக்தர்கள் நினைத்ததை கொடுக்கும் ஆலயமாக பொம்மிடி பகுதியில் இந்த ஆலயம் விளங்கி வருகிறது. மேலும், ஆண்டுதோறும் மாரியம்மன் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், பொங்கல் விழா மற்றும் கார்த்திகை தீபம் ஆகிய விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மக்கள் சாதி, மத பேதமின்றி ஆலய விழாக்களில் கலந்து கொள்வது இவ்வூரின் ஒற்றுமையை பறைசாற்றும். அதற்கு எடுத்துக்காட்டாக, 13-12-2024ல் நடந்த திருக்கல்யாண வைபவத்தில் பொம்மிடி சுன்னத் ஜமாத் சார்பில் மேள, வாத்தியங்களுடன் முஸ்லீம் பெருமக்கள் சீர்வரிசை கொண்டு வந்து கொடுத்ததை சொல்லலாம். இக்கோவிலை நிர்வாக்குழு தலைவர் திரு.எம்.பி. அன்பில் ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகத்தின் கீழ் கோயில் நிர்வாகம் சிறப்பாக நடந்து வருகிறது.
இந்த ஆலய வளாகத்தில், அருள்மிகு ஸ்ரீ பொன் முத்துமாரியம்மன் சன்னிதி, அருள்மிகு ஸ்ரீபொன் விநாயகர் சன்னிதி, அருள்மிகு ஸ்ரீ உமா மகேஸ்வரி உடனுறை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் சன்னிதி, பைரவர் சன்னிதி, நந்தி,மற்றும் நவகிரகங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளது. திருத்தேரும் இந்த ஆலயத்தில் உள்ளது. மேலும், ஆலய வளாகத்தில் உள்ள அன்னதான கூடத்தில் நன்கொடையாளர்களால் முக்கிய நாட்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
பக்தர்களுக்கென, பாத்ரூம் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தங்கும் வசதி, அவசர வழி பாதைகள் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட திருத்தலமாகவும் இந்த ஆலயம் அமையப் பெற்றுள்ளது. ஆலயத்தின் வரவு- செலவு கணக்குகள் நிர்வாகக் குழுவால் முறையாக பராமரிக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த ஆலயம் பொம்மிடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின், நலன் காக்கும் ஆலயமாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஆலயமாகவும் விளங்கி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக