நாகரசம்பட்டியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தானிய உலர் களம் – விவசாயிகள் கண்டனம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

நாகரசம்பட்டியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தானிய உலர் களம் – விவசாயிகள் கண்டனம்


தர்மபுரி, ஏப்ரல் 5:

தர்மபுரி மாவட்டம், தர்மபுரி ஒன்றியத்திற்குட்பட்ட கே.நடுஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட நாகரசம்பட்டி கிராமத்தில் ரூ.9 லட்சம் நிதியில் புதிய தானிய உலர் களம் அமைக்கும் பணி தரமின்றி நடைபெறுவதாக கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பிரதான தொழில் விவசாயம். நெல், கடலை, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை காயவைக்க, சிறந்த தரத்தில் தானிய உலர் களம் தேவையாக இருந்ததால், பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.


இதனையடுத்து, 3 மாதங்களுக்கு முன்பு ரூ.9 லட்சம் மதிப்பில் 50 அடி x 50 அடி பரப்பளவில் தானிய உலர் களம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், அந்தப் பணிகள் தரமின்றி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கட்டுமான வேலைகளில் தகுந்தக் கட்டுமான தரநிலைகள் பின்பற்றப்படவில்லை என்றும், நிலத்தில் விரைவில் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பணிகளை சிறப்பாக செய்ய உறுதியளித்தனர். அதன் பேரில் இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது நடைபெறும் பணிகளும் தரமற்றவையாகவே உள்ளன என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


"நாகரசம்பட்டி கிராமத்தில் 130 விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றன. நமது கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் நிலத்தில் நெல், கம்பு, கடலை, பருத்தி, துவரை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இத்தனை தானியங்களை உலர வைக்கும் வசதியே இல்லாமல் இருந்தது. தற்போது அமைக்கப்படும் உலர் களம் தரமற்றதாக உள்ளது. இது உடைந்து பயிர்கள் சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே, தரமான உலர் களம் கட்டியளிக்கப்படாவிட்டால், எங்களது சொந்த செலவில் நாங்கள் அமைத்து கொள்வோம்."


உறுதியான கட்டுமான தரத்துடன், பயன்பாட்டிற்கு ஏற்ப தானிய உலர் களம் அமைக்கப்பட வேண்டும். வறட்சி காலத்தில் இதுவே விவசாயிகளுக்கு மிக முக்கியமான தேவையாக உள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad