தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையத்தில் பட்டுப்புழுவியல் துறையில் நான்காம் ஆண்டு இளம் அறிவியல் (B.Sc. Sericulture) பயிலும் மாணவர்கள் ப.மா.தீபக், சி.தேவானந், ரா.கணேஷ், பு.கௌதம், ர.ஜெயராமன் ஆகியோர், ஊரக பட்டுப்புழுவியல் பணி அனுபவத்திட்டத்தின் (Rural Sericulture Work Experience – RSWE) கீழ், தருமபுரி மாவட்டத்தில் இரண்டு மாத பயிற்சித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பயிற்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் பட்டு வளர்ச்சித் துறையின் செயல்பாடுகளை நேரில் பார்த்து கற்றுக்கொள்வதோடு, அந்தத் துறையில் செயல்படும் விவசாயிகளையும் நேரில் சந்தித்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். அவர்கள் பட்டுப்புழு வளர்ப்பு முறைகள், பயிர் மேலாண்மை, வளர்ச்சி பராமரிப்பு ஆகியவையில் திறனுடன் செயல்படுகின்றனர். மேலும் அரசு அலுவலகங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs), அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) ஆகியவற்றின் பணிகளில் பங்கேற்று அனுபவத்தைப் பெறுகின்றனர்.
இந்த ஒளிவிழா பயணத்தின் ஒரு முக்கியமான கட்டமாக, அவர்கள் சமீபத்தில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் அமைந்துள்ள SEEDS – Social Economic Environment Development Society என்ற தொண்டு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்றனர். “ஜவுளி தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைக்கப்படாத பெண் தொழிலாளர்களின் நலனில் குடிமைக் சமூகங்களின் பங்கு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், மாணவர்கள் சமூக நலத்துறையிலும் தங்கள் பங்களிப்பை வழங்கும் வகையில் கலந்துரையாடினர்.
இந்த நிகழ்வின் பின்னர், SEEDS நிறுவனத்தின் நிறுவனர் திரு. சரவணன் அவர்களுடன் நேர்காணல் நடத்தி, அந்த நிறுவனம் மேற்கொள்ளும் சமூக செயல்பாடுகள் குறித்தும், உழவர்களின் வாழ்வாதார மேம்பாட்டில் அதன் பங்களிப்பு குறித்தும் விரிவாக அறிந்துகொண்டனர். அதேபோல், அதியமான் காய்கறி சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் (FPO) செயல்பாடுகள் மற்றும் சமூக முக்கியத்துவம் குறித்தும் உரையாடினர்.
இந்நிகழ்வு, இளம் விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப அறிவையும், சமூக நலனை நோக்கிய அவர்களின் விழிப்புணர்வையும் ஒருங்கிணைக்கும் சிறந்த வழிகாட்டுதலாக அமைந்தது. கல்வி பின்புலத்தை வெறும் புத்தகங்களில் மட்டுமல்லாமல், வாழ்வின் பரந்த வெளியிலும் பயிற்சி பெற்று, மாற்றத்தை உருவாக்கும் இளம் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது இந்நிகழ்வின் மூலம் உறுதியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக