தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 810 மனுக்கள் பெறுப்பு, ரூ.1.07 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஏப்ரல், 2025

தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 810 மனுக்கள் பெறுப்பு, ரூ.1.07 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்.


தருமபுரி, ஏப்ரல் 21:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 810 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு வாய்ப்புகள், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.


இவற்றைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கிணங்க விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்கள் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதைக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்” என்றும் அவர் கூறினார்.


மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்:

  • 10 பயனாளிகளுக்கு ரூ.73,500 மதிப்பிலான செயற்கை கால்கள்

  • 8 பயனாளிகளுக்கு ரூ.31,200 மதிப்பிலான காலிபர் கருவிகள்

  • 4 பயனாளிகளுக்கு ரூ.2,200 மதிப்பிலான ஊன்றுகோல்கள்
    மொத்தம் ரூ.1.07 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


அரசுப்பணியாளர் நியமனம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-4 தேர்வில் தேர்ச்சி பெற்று, தருமபுரி மாவட்ட பேரூராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒருவருக்கு, பாலக்கோடு பேரூராட்சியில் வரித்தண்டலர் பணியிடத்திற்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.


குடிமைப் பணிகள் தின பாராட்டு: தேசிய குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட அளவில் சிறப்பாக பணிபுரிந்த நான்கு அரசு ஊழியர்களுக்கு, கேடயங்கள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு தெரிவித்தார்.


மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு. கணேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி செண்பகவள்ளி மற்றும் பிற அரசுத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad