தருமபுரி மாவட்டத்தில் இளைஞர்கள் தொழில் முனைவோராக வளர்க்கும் முக்கிய முயற்சியாக, இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இலவசமாக பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழக அரசின் இணைப்பில், இந்தியன் வங்கி மூலம் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி இளைஞர்களுக்கு தொழில்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் தனியாக ஒரு தொழில் தொடங்கும் அளவுக்கு நம்பிக்கையும் திறமையும் வழங்கும் வகையில் உள்ளது. அனுபவமுள்ள பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது வாழ்வியல் திறன்கள், வங்கிகள் மூலம் கடன் பெறுவது, சந்தை ஆய்வு செய்வது, திட்ட அறிக்கைகள் தயாரிப்பது போன்றவை பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சணல் பொருட்கள் தயாரித்தல், இருசக்கர வாகன பழுதுபார்த்தல், வீட்டு மின் உபகரணங்கள் பழுதுபார்த்தல், நான்கு சக்கர வாகன ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் 18 முதல் 45 வயதுள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. பயிற்சிக்காலத்தில் மதிய உணவும் தேநீரும் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படுகிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் ஏப்ரல் 22, 2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி வாயிலாக பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றி, சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு ஒரு சிறந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அனைவரையும் அழைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக