தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதையடுத்து, குடிநீர், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட கலெக்டர் சதிஷ் உத்தரவின் பேரில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையிலான குழு பாலக்கோட்டில் உள்ள குடிநீர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு, விநியோக மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தது.
ஆய்வின்போது, தயாரிப்பு மையங்களின் சுற்றுப்புற சுத்தம், உபகரணங்கள், மூலப்பொருள்கள், சேர்மானங்கள், சர்க்கரை உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன. தயாரிப்பு மற்றும் விற்பனைக்காக உள்ள குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம்களில் தயாரிப்பு தேதி, முடிவு தேதி, பேட்ச் எண், உணவுப் பாதுகாப்பு உரிம எண் போன்ற விவரங்கள் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதும் சோதனை செய்யப்பட்டது.
இதனுடன், பாலக்கோடு புதுபட்டாணியர் தெருவில் உரிய விபரங்கள் அச்சிடப்படாமல் தயாரிக்கப்பட்ட ஆரஞ்சு, லெமன் மற்றும் பாதாம் உள்ளிட்ட குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை அழிக்கப்பட்டன. இந்த ஆய்வில் மொரப்பூர் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் திருப்பதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக