தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொலசனஅள்ளி கிராமத்தில் அருள்மிகு திரெளபதிஅம்மன் உடனுறை தர்மராஜா மற்றும் கொல்லமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்த விழா, கடந்த 10 ஆம் தேதி கணபதி பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர், முக்கிய நாளான இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேத பாராயணம், நான்கு கால வேள்வி பூஜைகளுடன் ரக்ஷாபந்தன, நாடிசந்தனம் செய்யப்பட்டு பூர்ணாஹதி நடந்தது. இதனையடுத்து, யாகசாலையிலிருந்து புனித தீர்த்த கலசம் எடுத்து சென்று கோயில் உச்சியில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர், கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அடுத்து, திரெளபதிஅம்மன் உடனுறை தர்மராஜா மற்றும் கொல்லமாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.