தர்மபுரி, ஏப்ரல் 9 –
2024–2025 கல்வியாண்டுக்கான தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் விளையாட்டு விழா இன்று (09.04.2025) கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் விஜயா தாமோதரன் தலைமையாற்றினார்.
விழாவின் தொடக்க விழாவில், கல்லூரி உடற்கல்வி இயக்குனரும், விளையாட்டு குழு செயலாளருமான முனைவர் கு. பாலமுருகன் வரவேற்புரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சா.சோ. மகேஸ்வரன், தர்மபுரி மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் பா. சிந்தியா செல்வி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் கே. சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதை ஏற்றுக் கொண்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக, காவல் கண்காணிப்பாளர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து போட்டிகளைத் துவக்கி வைத்தார். 22 துறைகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களை கௌரவித்தனர்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மாணாக்கர்களின் மல்லர் கம்பம் (Mallarkambam) காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. அதிக புள்ளிகள் அடிப்படையில் வரலாற்றுத்துறை மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றி பெருமை பெற்றனர். விழா நிறைவில் மாணவச் செயலர் எம். புவனேஸ்வரி நன்றி கூறினார். இந்த விளையாட்டு விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்தது கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன் என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக