தர்மபுரி, ஏப்.29 –
இலக்கியம்பட்டி அடுத்த செந்தில்நகரை சேர்ந்த வித்யாசாகர் (65) பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இளநிலை பொறியாளர். அவரது மனைவி புஷ்பலதா (63) சமூக நல பாதுகாப்பு துறையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ஒரே மகள் திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இன்று மாலை, இருவரும் ராயக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சொகுசு காரில் சென்று கொண்டிருந்த போது, பொம்மனூர் மேம்பாலம் அருகே திடீரென ஒரு நாய் வாகனத்தின் முன் ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் பிரேக் போட்ட வித்யாசாகர் கார் மீது கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், மகேந்திர மங்கலம் போலீசார் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் புஷ்பலதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். வித்யாசாகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக