தருமபுரி மாவட்டத்தில் 135 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

தருமபுரி மாவட்டத்தில் 135 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.


தருமபுரி, ஏப்ரல் 11:

தருமபுரி மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகம் வரவேற்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவினருக்கு வயது வரம்பு 21 முதல் 40 வரை, பழங்குடியினருக்கு 18 முதல் 40 வரை மற்றும் விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்களுக்கு 20 முதல் 40 வயது வரையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். பணியிடத்திற்கும், குடியிருப்பிற்கும் இடையிலான தூரம் 3 கி.மீ.க்கு மேற்பட்டிருக்கக் கூடாது.


இப்பணிக்கு முதலில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படும். ஓர் ஆண்டுக்குப் பின் ஊதிய நிலை 1 (ரூ.3000-9000) அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்காக 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதுடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று, ஆதார் அட்டை, சாதிச் சான்று, விதவை அல்லது மாற்றுத் திறனாளி சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் 30.04.2025 மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம். dharmapuri.nic.in இணையதளத்திலிருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யலாம். கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. நேர்முகத் தேர்வுக்குத் தேர்வானவர்கள் அசல் சான்றிதழ்களுடன் அழைக்கப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad