பாலக்கோடு அருகே ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் களப்பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஏப்ரல், 2025

பாலக்கோடு அருகே ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் களப்பயிற்சி.

பாலக்கோடு, ஏப்ரல் 21:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பல்லேனஅள்ளி, ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் எப்போதும் சிறந்த பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் இடமாக விளங்குகிறது. இந்த முறை, கோயம்புத்தூர் மாவட்டம், வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை அறிவியல் பயிலும் ஒன்பது மாணவர்கள், கிராமப்புற விவசாய பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக இம்மையத்தில் களப்பயிற்சி மேற்கொண்டனர்.


மாணவர்களை பேராசிரியர் மற்றும் மைய தலைவர் முனைவர் முரளி அவர்கள் உற்சாகமாக வரவேற்று, இந்த மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டில் ஆலம்பாடி மாட்டினம் வகிக்கும் பங்கு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். பசுவிலிருந்து பெறப்படும் பால், அதனை மையமாகக் கொண்ட மதிப்பூட்டிய பொருட்கள், எருசேர்க்கை, மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவற்றின் தேவை மற்றும் சந்தைப்படுத்தும் நுட்பங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி விளக்கினார். இது மாணவர்களிடம் வேளாண்மையை முழுமையாக அணுகும் புதிய பார்வையை ஏற்படுத்தியது.


மேலும், இம்மையத்தில் பாதுகாக்கப்படும் திருச்சி கருங்குறும்பை இன செம்பறியாடு பற்றிய முக்கியத்துவமும், அதன் பாதுகாப்பும் குறித்து விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது. உதவி பேராசிரியர் முனைவர் செந்தமிழ் பாண்டியன் அவர்கள், கால்நடை வளர்ப்பில் முக்கியமான மேலாண்மை முறைகள், பசுந்தீவன வளர்ப்பு, சரிவிகித தீவன உற்பத்தி மேலாண்மை, நோய் தடுப்பு முறைகள், மற்றும் உபரி பசுந்தீவனங்களை உலர் தீவனமாக மாற்றும் நவீன நுட்பங்கள் ஆகியவை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.


மாணவர்கள், இந்த களப்பயிற்சி தங்களுக்கான ஒரு நேரடி கற்றல் வாய்ப்பு என்பதையும், இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு வழியாக கிராமப்புறங்களில் வாழ்வாதார மேம்பாடு எவ்வாறு சாத்தியமாகிறது என்பதை புரிந்து கொண்டதாகவும் கூறினர். இவ்வாறு, ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் மாணவர்களுக்கு கல்விக்காகவும், வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பதற்காகவும் ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad