Type Here to Get Search Results !

தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்த விழிப்புணர்வு பேரணி, சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் விளக்குவதற்காக மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. பேரணியில் காவல்துறை, போக்குவரத்து துறை, வருவாய் துறை அலுவலர்கள், இருசக்கர வாகன விற்பனையக பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


பேரணி தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, சேலம்-தருமபுரி பிரதான சாலை வழியாக தருமபுரி நகராட்சி, நான்கு ரோடு பகுதிகளில் நடைபெற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., கூறுகையில், "தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 129-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.


மேலும், "உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 4 வயதுக்கு மேற்பட்ட பின்பதிய பயணிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்," என்றும் தெரிவித்தார். சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாகன ஓட்டிகள் செல்போனில் பேசிக்கொண்டு, குடிபோதையில், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.


நிகழ்வின் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சித்தலைவர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசங்களை வழங்கினார். மேலும், "சாலை பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு" குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. சி.க. ஜெயதேவ்ராஜ், உதவி ஆணையர் (கலால்) திருமதி. நர்மதா, போக்குவரத்து ஆய்வாளர் திரு. தரணீதரன், அரசு அலுவலர்கள், காவல்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies