
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பல்லேனஅள்ளிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி அய்த்தா கடந்த 12ஆம் தேதி இரவு பழையூர் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மோதியது. விபத்தில் படுகாயமடைந்த அவர் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து உறவினர்கள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பயன்படுத்தி, விபத்து ஏற்படுத்திய நபரை உடனே கைது செய்ய வேண்டும் என காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, கோரிக்கையை வலியுறுத்தி காரிமங்கலம்-பாலக்கோடு நெடுஞ்சாலையின் அனுமந்தபுரம் பிரிவு சாலையில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து, காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ. சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த திடீர் மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.