Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் மினி பேருந்து இயக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.


தருமபுரி மாவட்டத்தில் மினிபேருந்து புதிய விரிவான திட்டம் 2024ன்-கீழ் புதிய வழித்தடங்களுக்கான மினி பேருந்து அனுமதிச்சீட்டு வழங்கும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: மினி பேருந்திற்கான புதிய விரிவான திட்ட அரசாணை பொதுமக்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது. அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்களின் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் முறையான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த புதிய விரிவானதிட்டம் 01.05.2025 முதல் அமலுக்கு வரவிருக்கிறது. இத்திட்டத்தின்படி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ ஆகும். அதில் குறைந்தபட்சம் சேவை செய்யப்படாத பாதையின் நீளம் மொத்த வழித்தட நீளத்தில் 65 விழுக்காட்டிற்கு குறையாமல் இருக்க வேண்டும். வழித்தடத்தின் தொடக்கபுள்ளி மற்றும் முனையப்புள்ளி சேவை செய்யப்படாத வழித்தடத்தில் உள்ள ஏதேனும் ஒரு குடியிருப்பாகவோ கிராமமாகவோ இருக்க வேண்டும்.  அதில் ஒன்று பேருந்து நிறுத்தமாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ இருக்கலாம்.


புதிய மினிபேருந்து திட்டத்தின்படி புதிய அனுமதிச்சீட்டு வழங்கும் தூரத்தை இறுதி செய்யும் அதிகாரம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. மினிபேருந்து வழித்தடத்தை மாவட்ட ஆட்சியரால் ஆய்வுசெய்து உறுதிப்படுத்தப்படும். முனையப்புள்ளியிலிருந்து அடுத்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, இரயில்நிலையம், உழவர்சந்தை, வேளாண் ஒழுங்கு முறை சந்தை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலூக்கா அலுவலகம் மதம் சார்ந்த வழிப்பாட்டுத்தலங்கள் உள்ள இடம் அல்லது பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இடம் இவற்றுள் ஏதேனும் ஒன்று அமைந்திருப்பின் மொத்த அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளத்தைவிட கூடுதலாக ஒரு கிலோமீட்டருக்குள் அமைந்திருந்தால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அவர்கள், அரசு போக்குவரத்து கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் பிற அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து மேற்கூறிய இடங்களுக்கு பயணிகள் சென்றடைய உதவிடும் வகையில் சேவை பகுதியில் கூடுதலாக ஒரு கிலோமீட்டர் தூரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.


ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு நான்கு நடைகளுக்கு குறைவாக பேருந்து அல்லது மினிபேருந்து இயக்கப்படும் வழித்தடங்கள் அனுமதிக்கப்படாத வழித்தடங்களாக கருதப்படும். ஒரு குறிப்பிட்ட வழித்தடத்திற்கு வழங்கப்படும் அனுமதிச்சீட்டுகளின் எண்ணிக்கையை வட்டாரப் போக்குவரத்து அதிகாரியான மாவட்ட ஆட்சியரால் உறுதி செய்து அறிவிக்கை வெளியிடப்படும். ஒரு வழித்தடத்தில் அனுமதிக்கப்பட்ட அனுமதிச்சீட்டுகளின் எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதிச்சீட்டுக்கள் வழங்கப்படும்.


தற்போது நடைமுறையில் உள்ள மினிபேருந்து இயக்குநர்கள் புதிய திட்டத்திற்கு மாறவிரும்பினால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். மினி பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தவிர்த்து அதிகபட்சமாக 25 இருக்கைகள் வரை அனுமதிக்கப்படும்.


தருமபுரி மாவட்டத்தில் இந்த மினிபேருந்து புதிய விரிவான திட்டம் 2024ன்- கீழ் இதுவரை 35 புதிய வழித்தடங்களுக்கு விண்ணப்பிக்க தருமபுரி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. (ஒரு வழித்தடத்திற்கு அதிகபட்சம் இரண்டு அனுமதிச்சீட்டுகள் வழங்கும் பொருட்டு) மேற்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


மேற்கண்ட விண்ணப்பங்களை செயலர், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, தருமபுரி அவர்களிடம் உரிய கட்டணம் செலுத்தி 04.03.2025-க்குள் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies