தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.12.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மையினர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றார்கள்.
சிறுபான்மையினர் உரிமைகளை காக்க அவர்களுக்காக ஆண்டுதோறும் டிசம்பர்-18 ஆம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் இன்றைய தினம் நடைபெறும் இவ்விழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தமிழ்நாடு அரசு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுயமாக தொழில் செய்து, பொருளாதாரத்தை மேம்படுத்திகொள்ள தனிநபர் காலக் கடன் திட்டம், சுய உதவிக்குழு மூலம் சிறுகடன் திட்டம் செயல்படுத்தி வருகிறது.
மேலும், சிறுபான்மையின வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை, தேசிய கல்வி உதவித்தொகை, பெண்கல்வி ஊக்குவிப்புத்தொகை உள்ளிட்ட கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் உலாமக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு, மகப்பேறு, கருச்சிதைவு, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சமூக, பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்கு குறைந்தபட்ச தேவை கல்வி ஆகும். சிறுபான்மையின மாணவிகள் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளையும், சூழ்நிலை ஏற்படுத்தி தொடர்ந்து கல்வி பயல்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சிறுபான்மையின மக்கள் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாடு அடையும் பொருட்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி அறிந்து, அத்திட்டங்களின் மூலம் பயனடைய வேண்டும். மேலும், உலாமக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து, அந்நலவாரியத்தால் வழங்கப்படும் நலத்திட்டங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களை பற்றி விழிப்புணர்வு பெற்று, தகுதியான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும், இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 29 பயனாளிகளுக்கு ரூ.5,80,000/-க்கான நலத்திட்ட உதவிகளும், தருமபுரி மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 31 பயனாளிகளுக்கு ரூ.6,20,000/-க்கான நலத்திட்ட உதவிகளும், உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் 45 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளும் என மொத்தம் 105 பயனாளிகளுக்கு ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், சிறுபான்மையின சங்க நிர்வாகிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

.jpg)