அந்த கடிதத்தில், தருமபுரியில் உள்ள ஜோதிஅள்ளி மற்றும் பெல்ரம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு நான் சென்றபோது மக்களிடம் இருந்து பெற்ற இரண்டு கோரிக்கைகளை உங்கள் பார்வைக்காகவும், தேவையான நடவடிக்கைகளுக்காகவும் முன்வைக்கிறேன்.
ஜோதிஅள்ளி கிராமம் சேலம் - பெங்களூரு ரயில் பாதையை ஒட்டி 94/400 கிமீ முதல் 94/500 கிமீ வரை அமைந்துள்ளது. பள்ளி, கல்லூரிகள், சுகாதார வசதிகள் போன்றவற்றுக்கு கிராம மக்கள் தொடர்வண்டிப் பாதையைக் கடந்து செல்ல வேண்டும். அவர்கள் தங்கள் பண்ணை விளைபொருட்களை விற்கவும், மளிகை சாமான்கள் மற்றும் பிற அன்றாட தேவைகளை வாங்கவும் இப்பாதையைக் கடக்க வேண்டும்.
ஜோதிஅள்ளி மற்றும் அதை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4000 பேர் ரயில் பாதையைக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், பலர் ரயில் பாதையைக் கடக்கும்போது இறந்துள்ளனர். எனவே, 94/400 கிமீ முதல் 94/500 கிமீ வரை லெவல் கிராசிங்கை அமைக்க மாண்புமிகு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இரண்டாவது கோரிக்கை, சேலம்-பெங்களூரு ரயில் பாதையில் தற்போதுள்ள சுரங்கப்பாதையின் உயரத்தை உயர்த்த வேண்டும். சேலம் - பெங்களூரு ரயில் பாதையில் 207 @ கிமீ 90/600-700 என்ற பாலம் உள்ளது. போயர்கொட்டாய், குப்பன் கொட்டாய், காவேரியப்பன் கொட்டாய், ஜோடிசுனை போன்ற பல கிராமங்களுடன் பெல்ரம்பட்டியை இந்த சுரங்கப்பாதை இணைக்கிறது. பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோரிக்ஷாக்கள் மட்டுமே செல்லக்கூடிய உயரமே இப்பாலம் இருக்கின்றது.
போயர்கொட்டாய், குப்பன் கொட்டாய், காவேரியப்பன் கொட்டாய், ஜோடிசுனை உள்ளிட்ட கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் பிற அவசர ஊர்திகள் செல்ல இந்த வழியாகத்தான் உள்ளது. இக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 4500 மக்கள் வாகன வசதியின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் செல்லக்கூடிய ஒரே பாதை இதுதான்.
எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள், ரயில் பாதையின் குறுக்கே பேருந்துகள் மற்றும் லாரிகள் செல்லும் வகையில் பாலத்தின் உயரத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கிராமங்களுக்கு பொதுமக்களைச் சந்திக்க நான் சென்றபோது போது பொதுமக்களிடமிருந்து பெற்ற கோரிக்கை மனுக்கள் மற்றும் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்துள்ளேன்.
உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
மருத்துவர். அன்புமணி இராமதாஸ்
நாடாளுமன்ற உறுப்பினர் (மேலவை)