தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (09.12.2024) நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள்.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 594 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஒசஅள்ளி புதூர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு இன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூபாய் 12 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் மற்றும் ஊன்றுகோலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த சிகிச்சைகள் வழங்கியமைக்காக அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு IBC தமிழ் மற்றும் News 7 Channel சேர்ந்து கடந்த 29.11.2024 அன்று சென்னையில் ஜீவன் விருது வழங்கியதை தொடர்ந்து, இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர், காரிமங்கலம் வட்டாரத்தில் நடைபெற்ற உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், சின்னமொரசுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான திருமதி.ருக்குமணி, க/பெ. திரு.சக்திவேல் ஆகியோர் முக்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வேண்டி மனு அளித்ததை தொடர்ந்து, தம்பதி இருவரும் மாற்றுத்திறனாளியாக இருப்பதால், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்களின் தன்விருப்ப நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகை மற்றும் கிராம மக்களின் பங்களிப்பாக குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அம்மாற்றுத்திறனாளி தம்பதிக்கு முக்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கி, அதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.சாகுல் ஹமீத், காரிமங்கலம் வட்டாட்சியர் திரு.கோவிந்தராஜ், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் மரு.நாகேந்திரன், மருத்துவர்கள் மரு.சிவக்குமார், மரு.அனிதா தாமரைச்செல்வி, மரு.உமாராணி, மரு.பிந்து, உதவிப்பொறியாளர் திரு.சிலம்பரசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.