தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கண்காணித்தல், ஒழித்தல் (Illicit Arrack) மற்றும் போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் ஒழித்தல் (NCORD) தொடர்பாக காவல்துறை, வருவாய்த்துறை, மதுவிலக்கு அமல் பிரிவு (Enforcement Wing), தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மருத்துவத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் வனத்துறை அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 30.09.2024 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழித்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குட்கா போன்ற போதை பொருட்கள் பயன்பாடு குறித்து தணிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் பாதிப்புகள் குறித்தும், போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு முழுமையாக ஏற்படுத்திட வேண்டும்.
போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறையுடன் இணைந்து நடத்திட வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்தல், போதைப்பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட அனைத்து துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், உதவி ஆணையர் (ஆயம்) திருமதி.நர்மதா, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) திருமதி.மகேஸ்வரி, வட்டாட்சியர்கள் உட்பட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக