தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தருமபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் வட்டார அளவிலான வங்கியாளர்களுக்கான திட்ட விளக்க பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (20.08.2024) நடைபெற்றது. இப்பயிற்சியில் சிறுதானியங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்த சிறுதானிய கையேட்டினை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
வட்டார அளவில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான திட்ட விளக்க பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, கடன் நிலுவை விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து, தகுதியான நபர்களுக்கு கடன் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வங்கியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்,
இதனை தொடர்ந்து, பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், புலிக்கரை ஊராட்சி, சென்னியம்பட்டி கிராமத்தில் ரோஜா மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களால் தொழில் செய்யப்படும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட தின்பண்டங்கள் உற்பத்தி செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, உள்ளூர் விற்பனை மற்றும் சந்தைபடுத்துதல் குறித்தும், இத்தொழில் மூலம் வருவாய் குறித்தும் கேட்டறிந்து, தின்பண்டங்களை சுத்தமாகவும், சுகாதரமாகவும் செய்து நல்ல வருமானம் ஈட்ட வேண்டும் என சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மக்களுடன் முதல்வர்(ஊரகம்) முகாமில் பெறப்பட்ட மனுக்கள் நிலுவை, Grievance Petition Register, HSD வகைபாடு மாற்றம், பட்டா மாறுதல், E-patta, HSD படிவம், Encroachment Eviction பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
பின்னர், தருமபுரி மாவட்டம் பாடி மற்றும் செக்கொடி ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, துணை ஆட்சியர்கள் (பயிற்சி) திருமதி.சௌந்தர்யா, செல்வி.கார்த்திகா, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் திருமதி.சந்தோசம், திரு.முருகேசன், திரு.பெருமாள், வட்டாட்சியர் திரு.ரஜினி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.ரேணுகா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

