75-வது குடியரசு தினவிழா-2024 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று (26.01.2024) நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தளவாய்அள்ளி ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்கள்.
இக்கிராம சபைக்கூட்டத்தில், தளவாய்அள்ளி கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுசெலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People's Plan Campaign) மூலம் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II குறித்து விவாதித்தல், பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய அபியான் குறித்து விவாதித்தல், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் குறித்து விவாதித்தல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சிறப்பு நிகழ்வாக கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் ரூ.1000/- வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் கலந்துகொண்டு, பேசும்போது தெரிவித்ததாவது: குடியரசு தினவிழா-2024 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று நடைபெறுகின்றது.
இந்த தளவாய்அள்ளி ஊராட்சியில் நடைபெறுகின்ற இக்கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தருமபுரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை கடைக்கோடி கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்படுத்தி வருகின்றது.
கிராமங்களின் வளர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசு செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து தூய்மையாக வைத்து கொண்டால் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறும் வாய்ப்பினை அனைத்து ஊராட்சிகளும் பெறலாம். இந்த ஊராட்சியும் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறுவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் படிப்படியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீர் சேமிப்பு இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். இந்த கிராம சபைக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் நேரிடையாகவும், மனுக்களின் வாயிலாகவும் தெரிவித்துள்ளீர்கள். அதுகுறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறைவேற்றக்கூடிய அனைத்து திட்டங்களும் படிப்பாயாக நிறைவேற்றப்படும். மேலும். தகுதியான நபர்களுக்கு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா, நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.மகேஸ்வரி பெரியசாமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.மாது, நல்லம்பள்ளி வட்டாட்சியர் திருமதி.பார்வதி, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.லோகநாதன், தளவாய் அள்ளி ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.தனலட்சமி சரவணன், ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மா.தெய்வானை கிருஷ்ணன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)