Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு திட்ட ஒப்புதல் அரசாணை வழங்குதல்.


நூல் உற்பத்தி மற்றும் பின்னலாடைத் தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டினை இந்தியாவின் சிறந்த வணிகத் தளமாக நிலைநிறுத்திட வேண்டும் எனும் உயர் நோக்கத்தின் அடிப்படையிலும், அதிகமான தொழில் முதலீட்டினை ஈர்த்து அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சினை அடைவதுடன் சிறிய அளவிலான தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதன் மூலம் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையிலும் இவ்வரசுபல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டம் 2015ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட போதிலும் திட்ட வழிமுறைகளில் இருந்த இடர்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டில் யாரும் ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரவில்லை. இதனை அறிந்த இவ்வரசு சிறு மற்றும் நடுத்தர ஜவுளி தொழில்முனைவோர்கள் ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் வழிமுறைகளை எளிதாக்கும் பொருட்டு, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்தி 2022-ஆம் ஆண்டில் ஆணையிட்டது.


தற்போது சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் நிலத்தில் குறைந்த பட்சம் 3 உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும். இதற்கென உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்கள் அமைக்க தகுதியான திட்ட மதிப்பீட்டில் 50 விழுக்காடு (அதிகபட்சமாக ரூ.2.50 கோடி) வரை மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கிட ஆணையிட்டுள்ளது.


மேற்படி ஆணை காரணமாக சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களை அமைப்பதற்கு ஜவுளித் தொழில்முனைவோர் அதிக அளவில் ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர். தற்போது சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளதோடு, இத்திட்ட செயலாக்கத்திற்கான மொத்த மானியத் தொகை ரூ.13.75 கோடியில், முதற்கட்டமாக ரூ.5.00 கோடி ஒப்பளிப்பு செய்து ஆணையிட்டுள்ளது. இவற்றில் தர்மபுரி மாவட்டத்தில் M/s.பாரத் மினி டெக்ஸ்டைல் பார்க் என்ற சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. M/s. பாரத் மினி டெக்ஸ்டைல் பார்க் மூலம் சுமார் 300 பேருக்கு நேரடியாகவும் மறைமுகவாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.


மேற்படி பூங்காவுக்கான அரசாணை தலைமைச் செயலகத்தில், 22.01.2024 அன்று மாலை 05:15 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் M/s. பாரத் மினி டெக்ஸ்டைல் பார்க் சிறப்பு நோக்க முகமையின் (SPV) இயக்குநர் செல்வி.ஜோதிகா பொன்னுராஜ் என்பவருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். அரசு தலைமைச் செயலாளர், அரசு முதன்மைச் செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் துணிநூல் ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் பங்கேற்றனர். 


எனவே, மேற்படி திட்டத்தினை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜவுளி தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி மாவட்டத்தில் அதிக அளவிலான பூங்காக்கள் அமைக்க முன் வர வேண்டும். மேலும், இத்திட்டம் தொடர்பான விபரங்கள் தேவைப்படுவோர் மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, எண். 1A-2/1, சங்ககிரி மெயின் ரோடு, குகை. சேலம்-636 006. (தொலைபேசி எண் 0427-2913006) என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884