கடத்தூரில் உள்ள உணவகங்களில் ஆய்வில் உணவகங்கள் முறையாக உணவு பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா, மூலப்பொருட்கள் தரமாகவும், சமைத்த பொருட்கள் முறையாக மூடி வைத்து பரிமாறப்படுகின்றனவா செயற்கை நிற முட்டிகள் மற்றும் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறதா, மேலும் சட்னி, மோர், தயிர் மற்றும் இறைச்சிகள் தரம் குறித்து கண்காணித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் இரண்டு கடைகளில் இருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட இறைச்சி மற்றும் குளிர் பதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தத சமைத்த இறைச்சி சுமார் ஐந்து கிலோ அளவிலானது பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது.
இரண்டு உணவகங்களில் இருந்து உரிய விபரங்கள் அச்சிடாத மசாலா பாக்கெட்டுகள் இரண்டு கிலோ அளவிலானது, பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் இரண்டு லிட்டர் அளவு மற்றும் செயற்கை நிறமூட்டி பாக்கெட்டுகள், கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் நான்கு கடைகளுக்கு 4000 மற்றும் உரிய சுகாதாரம் பராமரிக்காத, அச்சிடப்பட்ட நாளிதழ்களில் எண்ணெய் பலகாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு உணவகங்களுக்கு மேம்பாட்டு அறிக்கை உடன் ஆயிரம் அபராதம் விதிக்க மாவட்ட நியமன அலுவலர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
உணவு பாதுகாப்புத்துறை கட் செவி(whatsapp) புகார் எண்ணில் பெறப்பட்ட புகார் அடிப்படையில் நத்தமேடு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கீழ் வீதி, மந்தை வீதி, மாரியம்மன் கோயில் பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் பெட்டி கடைகளில் காலாவதி பொருட்கள் உள்ளனவா, தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளனவா என கண்காணித்து ஆய்வு செய்யப்பட்டது.
மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து உரிய விவரங்கள் அச்சிடாத லோக்கல் குளிர்பான பாக்கெட்டுகள், காலாவதியான பாப்கார்ன் பாக்கெட்கள் மற்றும் விபரச்சீட்டு இல்லாத தின்பண்டங்கள், பிஸ்கெட்கள் கண்டெடுக்கப்பட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஒரு டீக்கடையில் இருந்து தரமற்ற கலப்பட தேயிலை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் மேற்படி கடைகள் உரிய உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் புதுப்பிக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக புதுப்பிக்க அனைத்து கடைகளும் எச்சரிக்கை நோட்டீசுடன், உணவுப் பொருள்கள் உரிய காலாவதி தன்மை கண்டறிந்து விற்பனை செய்ய வலியுறுத்தப்பட்டது.
காலாவதியான குளிர்பானம் மற்றும் தரமற்ற தேயிலை வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ஆயிரம் அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. ஆய்வு தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் நடைபெற நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.
.gif)

