தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா மூங்கில் மடுவு பகுதியை சேர்ந்தவர் பொய்யாமொழி. இவர் நேற்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் சென்னையில் திரைப்பட இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன்.
கடந்த மாதம் எனது நண்பர்கள் மூலம் டி அண்ட் ஜி என்ற பண முதலீடு செய்யும் ஆப் பற்றி தெரிந்து கொண்டேன். அந்த ஆப்பை டவுன்லோடு செய்து அதன்மூலம் முதலீடு செய்தேன். இந்த ஆப்பின் மூலம் செயின் லிங்க் போல எனக்கு தெரிந்தவர்களையும் இணைப்பதன் மூலம் 10 சதவீத கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறப்பட்டது.
இதன்படி பலரை இந்நிறுவனத்தில் இணைத்ததோடு நானும் ரூபாய் 3 லட்சம் வரை முதலீடு செய்தேன். பின்னர் அந்த ஆப் செயலிழந்தது. எனவே நான் ஏமாற்றப்பட்டதோடு தர்மபுரி மாவட்டத்தில் பலரும் பல லட்சம் வரை ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே நான் இழந்த ரூபாய் மூன்று லட்சம் பணத்தை மாவட்ட காவல்துறை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி, கோபிநாத், பாரதிதாஸ் ஆகியோரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.