தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் பயில போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் பள்ளி வளாகத்தில் உள்ள தகர கொட்டகையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வேர்க்குரு, வெய்யில் கொப்பளங்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் பெற்றோர்கள் முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க தமிழகஅரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவர்கள் அமர்ந்து படிக்க வகுப்பறை கட்டிடம் இல்லாதது கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள்,பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.