தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு நடைபெற்ற குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் (17.08.2023) இன்று தொடங்கி வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்கள். இம்முகாமில் தேசிய குடற்புழு நீக்க தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் மக்களைத் தேடி மருத்துவம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தேசிய குடற்புழு நீக்க தின முகாம் இன்றைய தினம் நடைபெற்றது. உலக மக்கள் தொகையில் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று 24 சதவீதமும் அதில் 25 சதவீதம் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குடற்புழு தொற்று பரவல் 25 சதவீதமாகவும் உள்ளது. குடற்புழு வகைகளாக உருண்டைப்புழு, கொக்கிப்புழு, சாட்டைப்புழு போன்றவை அறியப்படுகிறது. குடற்புழு தொற்றால் பொதுவாக அறிகுறிகள் இருக்காது. ஆனால் கடுமையாக தொற்று ஏற்பட்டு இருப்பின் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்படும். இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு, இரத்த சோகை நோய், ஊட்டச்சத்து, விட்டமின் ஏ சத்து மற்றும் உடல் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படுகிறது.
சிறு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய மாத்திரை குடற்புழு நீக்க மாத்திரை ஆகும். காரணம், குழந்தைகள் உண்ணுகின்ற உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு முழுமையாக கிடைப்பதற்கு குடலில் உள்ள புழுக்களை அழிப்பதற்காக இம்மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதனை குழந்தைகள் அனைவரும் கட்டாயம் எடுத்துக்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட முன்வர வேண்டும்.
மேலும், குடற்புழு நீக்க மருந்து / மாத்திரைகள் (அல்பெண்டசோல்) குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகையை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆகவே, குடற்புழு தொற்றினை தடுக்கும் நோக்கமாக தேசிய குடற் புழு நீக்க தினம் வருடத்தில் இருமுறை நடத்தப்படுகிறது. இச்சிறப்பு முகாம்களில் குடற்புழுவை அழிக்கும் பொருட்டு, அல்பெண்டாசோல் மாத்திரைகள் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மில்லி கிராம் அளவிலும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மில்லி கிராம் அளவிலும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு 400 மில்லி கிராம் அளவில் ஒரே தவணையில் வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் 1333 அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 225 துணை சுகாதார நிலையங்களிலும், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்வி நிறுவனங்களிலும் பயிலும் மாணவர்களுக்கும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் மொத்தமாக 6,37,352 பயனாளிகளுக்கு 1741 பணியாளர்களைக் கொண்டு இன்றைய தினம் வழங்கபடுகிறது.
குடற்புழு தொற்றை தடுத்திட திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது, கழிவறையை பயன்படுத்துவது, வெளியில் செல்லும் போது காலணிகளை அணிந்து செல்வது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, காய்கறி பழங்களை நன்றாக கழுவிய பின் உட்கொள்வது, சுகாதாரமான குடிநீர், உணவை உட்கொள்வது, உணவுக்கு முன், கழிவறைக்கு சென்று விட்டு வந்த பின் கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற முறைகளை மேற்கொள்வதன் மூலம் தடுக்கலாம்.
தருமபுரி மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதற்கு ஊக்குவிக்கவும் குடற்புழு நீக்க மாத்திரையின் பயன், வழங்கப்படும் நாள் குறித்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி தருமபுரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க திட்டம் சிறப்பாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கவும் தொடர்புடைய அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.தனசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் திரு.விஜயகுமார், சோலைக்கொட்டாய் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மரு.தேவி, தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவியர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.