இக்கூட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி கடந்த 25.08.2023 அன்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தருமபுரி டவுன் நகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் 111 பள்ளிகளில் பயின்றுவரும் 1 ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள 6126 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் கீழ், பயன்பெறும் வகையில் கடந்த 15.09.2022 அன்று முதற்கட்டமாக தொடங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக அனைத்து வட்டாரங்கள், பேருராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 1013 பள்ளிகளில் பயின்று வரும் 51,527 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் 25.08.2023 அன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்கீழ் தருமபுரி ஊராட்சிகளில் 951 பள்ளிகளில் பயின்று வரும் 46741 மாணவ, மாணவிகளும், பேரூராட்சிகளில் 49 பயின்று வரும் பள்ளிகளில் 3812 மாணவ, மாணவிகளும், நகராட்சியில் 13 பள்ளிகளில் பயின்று வரும் 974 மாணவ, மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவானது குழந்தைகள் விரும்பி சாப்பிடும்படி சுவையானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் தினந்தோறும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உணவு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.
இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களிடம் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், இத்திட்டத்திற்கென பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களின் தரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்நிகழ்வுகளின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம்.பெ.சுப்பிரமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திரு.புவனேஷ்வரன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) திருமதி. மான்விழி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.