பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ்முனியன் இடைக்கால பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியனை உள்நோக்கத்தோடு அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், வட்டாட்சியர் மனோஜ்முனியன் இடைக்கால பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்,வட்ட செயலாளர் ராஜா, வட்ட பொருளாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பென்னாகரம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர் என தமிழ்நாடு வருவாய்த் துறையில் பணிபுரியும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தால் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன, மேலும் பல்வேறு கோரிக்கை மனுக்களுடனும், வருவாய் துறை சார்ந்த சேவைகள் பெற வந்திருந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பிச் சென்று கடும் அவதிக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.