Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்டத்தின் முதல் சி.என்.ஜி பேருந்து மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.


கனரக வாகனங்களில் பெட்ரோல் டீசலுக்கு பதில் சி.என்.ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி தர்மபுரி மாவட்டத்தின் முதல்  பேருந்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.


பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருளுக்கான கச்சா எண்ணெய்வளம் நாளுக்கு நாள் குறைந்து வரும் வேளையில், மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதில் உலக நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. பயோ டீசல், எல்பிஜி, இயற்கை வாயு எத்தனால், மெத்தனால், பசுமை ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைக்க முடியும்.


ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 104 ஆக உள்ளது. அதேவேளையில் எத்தனால் மற்றும் எல்பிஜி ரூபாய் 64க்கு கிடைப்பதனால் எரிபொருளுக்கான செலவீனம் குறையும். இது தவிர கார், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களில் மின்சாரத்தை மாற்று எரிபொருள் சக்தியாக பயன்படுத்துவதன் மூலமாக எரிபொருள் செலவீனம் குறைந்துவிடும்.


இவையெல்லாம் ஒருபுறம் இருக்க வாகனங்களில் பெட்ரோல், டீசல் தவிர்த்து மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதன் மூலம் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தலாம். சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து அனைவரையும் விழி பிதுங்க வைத்துள்ளது.
 

பஸ், லாரி ஆட்டோ, மினி லாரி, டாக்ஸி போன்ற பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன் உடனடியாக விலையை குறைக்க வேண்டும் என பஸ் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


சி.என்.ஜி எனப்படும் கம்ப்ரெஸ்டு நேச்சுரல் கேஸ் மீத்தேன் வாயு ஆகும். வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் எல்பிஜி புரோபென் மற்றும் பியூட்டன் வாயுக்களின் கலவையாகும். சி.என்.ஜி நிலக்கரி மீத்தேன் வாயு படுகைகள், எண்ணெய் வயல்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது. 


கோழி எரு, மாட்டுச்சாணம், காய்கறி கழிவு ஆகியவற்றிலிருந்தும் இந்த வாய்வை உற்பத்தி செய்யலாம். தற்போது டெல்லியில் இயங்கக்கூடிய பொது போக்குவரத்து வாகனங்களும் அதிக அளவில் சி.என்.ஜி எரிவாயுவை பயன்படுத்தி இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பெருநகரங்கள் பலவற்றிலும் சி.என்.ஜி பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கேரளாவில் பஸ் உரிமையாளர்கள் அதிகளவில் சி.என்.ஜி எரிபொருளை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.


ராசிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியர் தினகர் தமிழகத்தில் முதல்முறையாக மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட சி.என்.ஜி மறு சீரமைப்பு மையத்தை  சேலம் மற்றும் சென்னையில் துவக்கி உள்ளார். பஸ், லாரியில் டீசல் டேங்க்கை நீக்கிய பிறகு தலா 13 கிலோ கொள்ளளவு கொண்ட 8 சிலிண்டர்கள் ஒரு பக்கத்திற்கு நான்கு வீதம் பஸ்ஸில் பொருத்தப்படுகிறது. பம்ப், நாசில்கள் நீக்கப்படுகின்றன. சி.என்.ஜி அதிக வெப்பத்தை வெளியிடும் ஆதலால் கூடுதல் திறன் கொண்ட ரேடியேட்டர் மற்றும் பிரத்தியேகமான பிஸ்டன்கள் பொருத்தப்படுகின்றன. 


ஒவ்வொரு கனராக வாகனமும் சி.என்.ஜிக்கு மாறும்பொழுது கார்பன்-டை-ஆக்சைடு போன்ற நச்சுவாயுவின் வெளியேற்றம் குறைகிறது. டீசல் விலையை விட சி.என்.ஜி விலை குறைவு. டீசல் வாகனங்களை ஒப்பிடும்போது சி.என்.ஜி வாகனங்களில் குறைந்த மாசு, குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் கூடுதல் மைலேஜ் கிடைக்கும். பஸ், லாரி போன்ற கனராக வாகனங்களை சி.என்.ஜிக்கு மாற்றும்போது அந்த வாகனங்கள் மாசுபடுத்தாத வகை வாகனங்களாவதால் ஸ்கிராப்பேஜ் பாலிசி 7 ஆண்டுகள் கூடுதலாக கிடைக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies