தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜாம்பாள் தலைமை தாங்கினார். ஈஸ்வரி, மனோரஞ்சிதம், கலா, ஜெயந்தி, சரஸ்வதி, சத்யா, ஜான்சிராணி, அல்வியா, காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் கவிதா கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஜீவா, லில்லி புஷ்பம் ஆகியோர் சிறப்புரையாற்ற, மாவட்ட பொருளாளர் தெய்வானை நன்றி உரையாற்றினார்.
- பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது போல அங்கன்வாடி மையங்களுக்கும் கோடை விடுமுறையை ஒரு மாத காலமாக வழங்கிட வேண்டும்,
- அங்கன்வாடி மையங்களுக்கு அரசு வழங்கும் சிலிண்டர் தொகையை பில்லில் உள்ளது போல் முழு தொகையையும் உடனடியாக வழங்கிட வேண்டும்,
- அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு பணிவரன்முறை செய்திட வேண்டும்,
- மைய பணியை செய்வதற்கு அரசு வழங்கிய செல்போன்கள் காலாவதியானதால் புதிய செல்போன்களை உடனடியாக வழங்கிட வேண்டும்,
- ஊழியர்கள் இரண்டு, மூன்று மையத்தை பொறுப்பு பார்ப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதால் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்,
- அங்கன்வாடி மையத்திற்கு வரும் மின் கட்டணத்தை அரசே செலுத்திட வேண்டும்,
- அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல ஓய்வு பெறும் வயதை அங்கன்வாடி ஊழியர்களுக்கும் 60இல் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.