மாட்டுப் பொங்கல் நாளன்று பொங்கல் வைத்து, படையலிட்டு கால்நடைகளை மக்கள் வணங்குவார்கள். அதே நாளில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற தமிழர் பாரம்பரியமிக்க வீர விளையாட்டுகள் நடைபெறும். தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதே போல வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களில் மஞ்சு விரட்டு எனப்படும் எருது விடும் திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டின் மஞ்சு விரட்டிற்காக தர்மபுரி சுற்று வட்டார பகுதிகளில் காளை மாடுகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். மணல் குவியல்களை குத்தி கிளறுதல் போன்ற பயிற்சிகளில் காளை மாடுகள் ஈடுபடுத்தப்பட்டு, பொங்கல் நாளன்று அவை மஞ்சு விரட்டுக்கு பயன்படுத்தப்படும்.
இந்த வகையில் 12 கிராமங்களை உள்ளடக்கிய தாய் கிராமமான கடகத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற எருது விடும் விழாவிற்கு கடகத்தூர் ஊர் கவுண்டர் பச்சியப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாலு, மாவட்ட கவுன்சிலர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பச்சமுத்து ஊர் முக்கிய பிரமுகர்கள் பழனி, காமராஜ், ஊர் கவுண்டர், ஊர் முதலியார், ஊர் செட்டியார், ஊர் நாயுடு, ஊர் நயினார், அனைத்து கோம்பு கவுண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்ட இந்த எருது விடும் விழாவிற்கு, தர்மபுரி பி1 நகர காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)


