மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மற்றும் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவு.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் கிராமம், பி.எம்.பி கல்லூரி வளாகத்தில் வருகின்ற 21.01.2023 அன்று ஜல்லிகட்டு நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மற்றும் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (06.01.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமை வகித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் கிராமம், பி.எம்.பி கல்லூரி வளாகத்தில் வருகின்ற 21.01.2023 அன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக நடத்திடுவது குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்ப்பாடு பணிகள் குறித்தும் கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
துறை அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு பின்பற்ற வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி விழா முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
- ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும் பெரும் பங்கு வகிப்பதால், ஒரு காளையுடன் சுமார் 5 முதல் 6 நபர்கள் வருவது வழக்கம். காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
- காளைகளை பதிவு செய்யும் பொழுது அக்காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும் தங்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் பதிவு, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.
- ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
- எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
- ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 3 நாட்கள் முன்பாக பதிவு செய்து, ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மேலும் அடையாள அட்டை இல்லாத வீரர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
- ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்) விதிகள், 2017, அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அரசினால் விதிக்கப்படும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான அரசின் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை அந்தந்த துறை அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.பழனிதேவி, தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு த.தாமோதரன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.ரெ.சாமிநாதன், தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அண்ணாமலை, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கௌரி மற்றும் திருமதி.ஷகிலா பானு, அனைத்து வட்டாட்சியர்கள், உட்பட விழாக்குழுவினர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.gif)

