தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூடுதல் கூட்டரங்கில் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (28.12.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு திறனாய்வு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல் மற்றும் பள்ளி அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அனைத்து அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிக்கவும், அவர்களுக்கு தேவையான அரசின் நலத்திட்டங்களின் விவரங்களை பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் சென்றடைவதையும் தலைமையாசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.
அனைத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, அரசு பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதை உணர்ந்து அம்மாணவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ வேண்டும். தமிழக அரசின் நலத்திட்டங்களின் விவரங்களை தங்களது பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்துவதை பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், அரசு பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகள் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும். பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மை, மேற்கூரை பராமரிப்பு, சுற்றுச்சுவர், மின்கசிவு இன்மை ஆகியவற்றில் தலைமையாசிரியர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தருமபுரி மாவட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையோடு தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய வருவாய் திறனறித் தேர்வு, ஊரக திறனாய்வுத் தேர்வு, தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியை அளிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி) திரு.மு.ராஜகோபால், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) திருமதி.இ.மான்விழி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி அரூர்) திரு.ச.ஷகில் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.