இந்த முகாமில் கோவை ஆர்.வி.எஸ். கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் ம.பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது : திறன் மேம்பாடு என்பது திறமையை அல்லது ஆற்றலை மேம்படுத்திக் கொள்வது. தற்போதைய போட்டி நிறைந்த இந்தச் சூழ்நிலையில் திறன் மேம்பாடு என்பது அவசியமான ஒன்று. ஒவ்வொருவரும் தான் தேர்ந்தெடுத்த துறையில் சாதனை புரிய தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம்.

பள்ளி மாணவர்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டுமென்றால் அதுகுறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்லூரி மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்து வேலைக்குச் சென்றால் அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு தன்னை திறன்மிக்கவராக மாற்றிக் கொள்வதே வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழி. நவீன தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், அறிவியல் வளர்ச்சி, மக்கள்தொகை, அதிகரிக்கும் போட்டி என பல காரணிகள் நம் திறனை வளர்த்துக் கொள்ள தூண்டுகின்றன. திறன் மேம்பாட்டினால் வேலையின்மை குறையும். வாழ்க்கைத் தரம் மேம்படும். தலைமைப் பண்பு வளரும். அதிகாரத்துவம் கிடைக்கும். சிக்கலுக்குத் தீர்வு காணும் அனுபவம் பெற முடியும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
