கடந்த மாதம் அரூர் மருத்துவமனைக்கு உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சைக்கு வந்த முதியவர் ஒருவர் மயக்கம் அடைந்துள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதித்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்த முதியவரை பற்றி விசாரித்ததில் அவர் ஈட்டியம்பட்டி முத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.

அவரின் மகள் சிவானி கிருஷ்ணகிரி மாவட்டம் பணங்காட்டுகொட்டாய் ஓடமங்கலம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அவரது தந்தையின் மரணம் இயற்கையானது என்றும், இறப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும், தான் வறுமையில் இருப்பதால் நல்லடக்கம் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், விஜயகாந்த், அலெக்சாண்டர் மற்றும் சசி தமிழரசன் ஆகியோரால் தருமபுரி நகராட்சி மயானத்தில் தங்கவேல் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார். நல்லடக்கம் செய்ய உறுதுணையாக இருந்த அரூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.சீனிவாசன் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ்குமார் கூறுகையில், மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 21 ஆதரவற்ற அமரர்கள் இரண்டு ஏழ்மையில் இறந்தவர்கள் என சேர்த்து மொத்தம் 23 அமரர்களை எங்கள் உறவாக எண்ணி நல்லடக்கம் செய்துள்ளோம். மை தருமபுரி அமைப்பின் சேவை இருக்கும் வரை இங்கு யாரும் அனாதைகள் ஆதரவற்றோர்கள் இல்லை, நாங்கள் இருக்கிறோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என தெரிவித்தார்.