மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 அக்டோபர், 2022

மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் இன்று (27.10.2022) நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று விவசாயிகளின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டறிந்து பேசும்போது தெரிவித்ததாவது:-


தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு 1,67,000 ஹெக்டேர் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை இறவை சாகுபடி 15,779 ஹெக்டேர் பரப்பளவும், மானாவாரி சாகுபடி 1,08,016 ஹெக்டேர் பரப்பளவும் என அக்டோபர்-2022 வரை மொத்தம் 1,23,795 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் இறவை மற்றும் மானாவாரி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு 93,873 ஹெக்டர் பழங்கள், காய்கறிகள், வாசனை பயிர்கள், மலைப்பயிர்கள், மருத்துவ மற்றும் நறுமண பயிர்கள், பூக்கள் உள்ளிட்ட பயிர் சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 53,468 ஹெக்டர் பரப்பளவில் பழங்கள், காய்கறிகள், வாசனை பயிர்கள், மலைப்பயிர்கள், மருத்துவ மற்றும் நறுமண பயிர்கள், பூக்கள் உள்ளிட்டவை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாயி யோஜனா நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 2022-2023-ஆம் ஆண்டிற்கு 6,100 ஹெக்டர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு சொட்டு நீர் பாசனம்  மிக மிக பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகள் அரசு மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு முன்வர வேண்டும். 

 

வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மையில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து, விவசாயிகள் அதிக மகசூல் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற பல திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் பணியாற்றி வருகின்றது. விவசாய பெருமக்களும் அத்தகைய திட்டங்களில் தங்களுக்கு தகுதியான, தேவையான திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுவதோடு, அரசின் அனைத்து விதமான திட்டங்களும், அனைத்து விவசாயிகளும் பெறுகின்ற வகையில் வேளாண் பெருமக்களும் உதவிட வேண்டும். 


தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2021) 1066.50 மி.மீ சராசரி மழையளவு கிடைத்தது. இந்த ஆண்டு அக்டோபர்-2022 திங்கள் வரை 985.37 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர்-2021  வரை பெய்த மழையை விட இந்த ஆண்டு அக்டோபர்-2022  வரை சுமார் 250.00 மி.மீ கூடுதலாக மழை பெய்துள்ளது.


வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2022-2023 ஆம் ஆண்டிற்கு 752.60 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதம் வரை 280.86 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 169.65 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி சான்று விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான சான்று விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.


தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர உரத்தேவை 43800 மெட்ரிக் டன் உரத்தேவை என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் இராபி பருவம் 2022-2023ல் 39,667 மெட்ரிக் டன் உரமும், அக்டோபர் மாதத்தில் இதுவரை 6,540 மெட்ரிக் டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 10,647 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் 2022-23 ஆம் ஆண்டிற்கு 30,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு மாதம் முடிய 15,885 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 5,104 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.


கூட்டுறவுத்துறையின் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் (வரை) சார்பில் 01.04.2022 முதல் 30.09.2022 வரை தருமபுரி மாவட்டத்தில் 15,733 விவசாயிகளுக்கு ரூ.12,890.03 இலட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டம் 2022-2023-ன் கீழ் சிறப்பு பருவத்தில் நெல்-II பருவ பயிருக்கும், ராபி பருவத்தில் ராகி, பருத்தி-III, நிலக்கடலை, மக்காச்சோளம்-I மற்றும் கரும்பு பயிர்களுக்கு 9062 விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ள 7106.58 ஏக்கர் பரப்பளவிற்கு ரூ.2589.18 இலட்சத்திற்கு பயிர்காப்பீடு செய்து, ரூ.38.97 இலட்சம் பயிர்காப்பீட்டு பிரிமீயத்தொகையாக செலுத்தி உள்ளனர். 2016-2017 ஆம் ஆண்டு முதல் 2021-2022 ஆம் ஆண்டு வரை 81,469 ஏக்கர் பரப்பளவிற்கு பயிர் காப்பீடு செய்த 89,373 விவசாயிகளுக்கு ரூ.4170.71 இலட்சம் பயிர்காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.


வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில் மான்யத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை விவசாய பெருமக்கள் பெற்று முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வேளாண் உற்பத்தியை பெருக்கி, அதிக வருவாய் ஈட்டி தங்களின் வாழ்க்கை தரத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும். 


மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்களுக்கு துறை அலுவலர்கள் முன்னுரிமை கொடுத்து, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு, அம்மனுக்கள் மீது உடனடி தீர்வு காண்பதோடு, அக்கோரிக்கை மனுக்களை வழங்குகின்ற விவசாயிகளுக்கு உரிய பதில்களை உடனடியாக அனுப்பிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.இராமதாஸ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் (பொ) மரு.கே.சண்முகசுந்தரம், வேணாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் திரு.கணேசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.மாலினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) திரு.வி.குணசேகரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad